அணு உலைகளின் மறுபக்கம் !!!!


கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரை அதன் ஒப்பந்தம் போடப்பட்ட நவம்பர் 1988ல்( தமிழகத்தில் ஜனவரி 1988- ஜனவரி 1989 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி) இருந்தே அணுசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. 10ஆண்டுகளுக்குப் பிறகு 1998ல் ரசியா-இந்தியாவிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கின. அப்போது மக்களிடம் எந்த கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. தமிழக அரசின் கருத்தும் கேட்கப்பட்டதாக தெரியவில்லை. 2001ல் கட்டுமான வேலைகளும், தூத்துக்குடி துறைமுகம் வழியாக எரிபொருள் இறக்குமதியும் நடைபெற்றது. 2004ல் கூடங்குளத்திலேயே துறைமுகம் அமைக்கப்பட்டது. அங்கு முழுவதும் கட்டுமான வேலைகள் மட்டுமே நடைபெற்றதால் மக்களுக்கு அதன் பாதிப்புகள் எதுவும் அறிந்திருக்கவில்லை. அணுசக்தியினால் ஏற்படக் கூடிய அழிவுகளை அறிந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், சில தன்னார்வ அமைப்புகளுமே அதற்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தன. 2006ல் மேலும் 4 அணு உலைக் கூடங்களை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியிலும், சென்னையிலு
ம் நடத்தப்பட்டது. இதில் பரவலாக கலந்து கொண்ட தென் மாவட்ட மக்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கிடையே ஜனவரி 2007ல் ரசிய அதிபர் புதினுடன், இந்தியப் பிரதமர் மேலும் 6000 மெகா வாட் மின் உற்பத்திக்கான 4 உலைகள் அமைக்க ஒப்பந்தமிட்டார்.
கூடங்குளத்தில் அணுசக்தி தயாரிப்பிற்கான மூலப்பொருளான யுரேனியம் ரசிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ரசியாவில் 5,00,000 டன் யுரேனியக் கனிமம் இருப்பில் உள்ளது. ஆண்டொன்றுக்கு, 11,000 முதல் 12,000 டன் வரை யுரேனியம் வெட்டி எடுக்கப்படுகிறது. 2006ல் மட்டும் ஒரு ரசியக் கம்பெனி, யுரேனிய சுரங்கம் மூலம் 8.1 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்துள்ளது (இந்திய ரூபாயில் 740 கோடி). இந்த யுரேனியம் என்ற தாதுப் பொருள் மிக அபாயகரமான கதிர்வீச்சுத் தன்மை கொண்டதாகும். அதனை அணு உலையில் இட்டு சிதைக்கும்போது வெளிப்படும் காமாக் கதிர்களைக் கொண்டு அதிக அழுத்த நிலையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இப்படி யுரேனிய அணு பிளவுபடும் போது அதிலிருந்து சில கனிமப் பொருள்கள் வெளிப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை, சீசியம், ஸ்டராண்டியம், புளூட்டோனியம் ஆகிய தாதுப் பொருள்கள். இவை புவியின் எந்த உயிர்ச்சூழல் தன்மையையும் சேராதவை. இதில், சீசியம் என்ற தனிமம்,தாவரங்களுக்குத் தேவையான பொட்டாசியம் போன்று தன்னைக் காட்டிக் கொண்டு உணவுச் சங்கிலியில் புகுந்து கொண்டுவிடும். அது தாவரங்களில் உள்ள செல் மூலக்கூறுகளின் தன்மையையே முழுவதுமாக மாற்றிவிடக் கூடியது. அதே போல, ஸ்ட்ராண்டியம், புளூட்டோனிய தனிமங்கள், மனிதர்களுக்குத் தேவையான கால்சியம் போன்று தன்னைப் போலியாகக் காட்டிக் கொண்டு நமது பற்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் புகுந்துவிடும். இவை, எலும்புறுக்கி நோய்,நுரையீரல் புற்று நோய், கர்ப்பக் கோளாறுகளை ஏற்படுத்தி நீண்ட கால தாக்கத்தினை ஏற்படுத்திவிடும். இவ்வாறாக பாதிப்பினை ஏற்படுத்தவல்ல இந்த தாதுக்கள், அணு உலையில் பயன்படுத்தப்படும் எந்த உலோகத்திலும் எளிதாக ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவை. அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் இந்த உலோகக் கழிவுகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கதிர்வீச்சினை ஏற்படுத்தவல்லவை. ரசியாவின் செர்னோபிலில் 1986-ல் நடந்த அணு உலை விபத்தின் கதிர்வீச்சு இன்றும் மிகத் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது, ஒவ்வொரு அணு மூலக்கூறுகளும் 1 நொடிக்கு 600
பிளவுகளை ஏற்படுத்தி நச்சுத் தன்மை வாய்ந்த காமாக் கதிர்களை உமிழ்ந்துவருகிறது. 2016ல் தான் இது 400 ஆகக் குறையுமாம். 2046ல் 200 என குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தன் தீவிரத்தைக் குறைக்குமாம். இப்படியாக பல ஆண்டுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதுதான் அணு உலை ஆபத்து என்பது. முக்கியமாக, எதிர்கால சந்ததி முடமாகப் பிறப்பதற்கும், தற்கால தலைமுறையை, புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாக்குவதே இதன் பலன். 8 கிலோ அளவிலான புளூட்டோனியத்தைக் கொண்டு ஒரு அணு குண்டு தயாரிக்கமுடியும். ஒரு அணு உலை 30 ஆண்டுகளுக்கு இயங்கினால், அதிலிருந்து வெளிப்படும் புளூட்டோனியத்தைக் கொண்டு 1200 அணு குண்டுகளைத் தயாரிக்கலாம்.
இத்தனை பாதிப்புள்ள அணு உலை அமைக்கப்படும் இடம் மனிதர்கள் வாழாத ஏதோ வனாந்திரமோ,பாலைவனமோ அல்ல. இந்தியாவின் தென் கோடி முனையில் சர்வதேச அளவில் உயிர்சூழல் சிக்கலான பகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடாப் பகுதியில்தான். சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவந்துள்ள விதிமுறைகளில் எந்த ஒரு அணு உலைக்கு அருகிலும் 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் சுற்றுலாத் தளம் இருக்க கூடாது. 30 கிலோ மீட்டருக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நகரங்கள் இருக்க கூடாது. ஆனால்,கூடங்குளத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிற்குள் தான் உலகப் புகழ் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி உள்ளது. 28 கிலோ மீட்டருக்குள் 2 லட்சம் மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் உள்ளது. ஏன் கூடங்குளம் அணு உலையைச் சுற்றியே 3 கிலோ மீட்டருக்குள் 30000 மீனவ, விவசாய,பனைத் தொழில் செய்து வாழும் மக்களும் உள்ளனர். அணு உலைக்கு சுற்றுச் சுவருக்கு அருகிலேயே450 குடும்பங்களுக்கு சுனாமி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அணு உலையை ஒட்டி மீன்கள் குஞ்சு பொறிக்கும் செங்கனேரி ஓடை அரை கிலோமீட்டருக்கு ஓடி கடலில் கலக்கிறது.
சமீபத்திய தொடர் மின்வெட்டு, மின்பற்றாக்குறை என்ற பிரச்சனையை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டு, தமிழகமே மின் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது என்ற சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், 2010-2011க்கான, மாநில அரசின் மின்சக்திக் கொள்கை விளக்க அறிக்கையைப் படிக்கும் போது, நமக்கு வேறு பல மாறுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன. அவை;

ஃ தமிழகத்தின் மின் தேவை அதிக பட்சம் 10865 மெகாவாட் (19.07.2011 அன்று பதிவானது)

ஃ காற்றாலைகளின் மூலம் மட்டும் 19355 மெகாவாட் திறன் கொண்ட மின்சார உற்பத்தி நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இன்றைய நிலவரப்படி, 6007 மெகாவாட் காற்றாலைகளின் மூலம் பெறப்படுகிறது.

ஃ 610 மெகா வாட் மின்சாரம், சர்க்கரை ஆலைகளில் உள்ள திட உயிர்கழிவுகள் மூலம் பெறப்படுகிறது

ஃ 139 மெகாவாட் பிற உயிர்க் கழிவுகளில் இருந்து பெறப்படுகிறது

ஃ 5 மெகாவாட் மின்சார சூரிய சக்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஃ மின்சாரப் பயன்பாட்டில், 27.5% மின்சக்தி வீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது (மொத்த நுகர்வில் இது 66.56%)

ஃ 34.92% மின் சக்தி தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது (2.41% நுகர்வோர் தொழிற்சாலை நடத்துபவர்கள்)

ஃ வர்த்தகத்திற்காக 10.43% (12.62% நுகர்வோர்)

ஃ விவசாயத்திற்காக 20.93% (8.83% நுகர்வோர் விவசாயிகளாக உள்ளனர்)

ஃ பிற தேவைகளுக்காக 6.67%(9.57% நுகர்வோர்)

ஃ இதில், 45.35% மின்சாரம், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களால் மட்டுமே நுகரப்படுகிறது. (மொத்த நுகர்வில் இவர்களின் பங்கு14.62%)

ஃ ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிப்பு 1% ஆக உள்ளது.
மத்திய அரசின் திட்டம், 2050க்குள் மின்சாரத் தேவையில் 25% ஐ அணு உலைகளில் இருந்து பெறலாம் என்பதே. தற்போது 3% மின் சக்தி மட்டுமே அணு உலைகளில் இருந்து பெறப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் நிலையை இந்த புள்ளிவிவரத்துடன் ஒப்பிட்டால், 2050க்குள் 40% மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது

(மின் தேவை அதிகரிப்பு ஆண்டிற்கு 1% ஆக உள்ளது). அப்படியானால், மத்திய அரசின் 25% இலக்கு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை 10% ஆக மட்டுமே இருக்கும்.

மொத்த மின் சக்தித் தேவையில் 10% அணு மின்சாரத்திற்காக தமிழ்நாடு தனது இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரத்தையும் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்போகிறதா?

தற்போது தமிழகம் அணு உலை மின்சக்தியை நம்பி இல்லை. இந்தியாவிலேயே அதிகம் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தமிழகம் தான்(36%). அதேபோல தமிழகத்தின் மின் விநியோகத்தில் 40% மின் சக்தி, காற்றாலைகள், உயிர்கழிவுகள், சூரிய சக்தியிலிருந்து தான் கிடைக்கின்றன...
அழிவினைத் தரும் அணு சக்தி வேண்டவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களும், அரசும் உறுதியாக இருக்கும் போது, மத்திய அரசு பணிந்து தான் ஆக வேண்டும்...
அணுப்பிளவு தொடர்ச்சியாக நடைபெறும்போது தோன்றும் வெப்பத்தால் நீர் சூடாக்கப்பட்டு, நீராவியாக மாற்றப்படுகிறது. அந்த நீராவியைக் கொண்டு மாபெரும் சுழலிகள் சுழலச்செய்யப்படுகின்றன. அச்சுழலிகளின் சுழற்சியால் மின்இயற்றி மூலம் மின்ஆற்றல் உருவாகிறது. சுழலியைச் சுழலச்செய்த பிறகு அந்நீராவி கடல் மற்றும் நதி நீரால் இயங்கும் குளிர்விப்பானால் மீண்டும் நீராக மாற்றப்படுகிறது. அந்நீர் மீண்டும் உலைக்களத்திற்குள் செலுத்தப்படுகிறது. அணு உலையின் மையப்பகுதி மிகுந்த வெப்பத்தால் உருகி விடும் அபாயத்திற்கு அணு உலை உருகுதல் என்று அழைக்கப்படுகிறது. முக்கியமான குளிர்விக்கும் குழாய் அடைபடும்போது அல்லது உடைந்து விடும்போது மையப்பகுதியின் வெப்பம் கணிசமாக‌ உயர்ந்து விடும். அச்சமயங்களில் ஆபத்துகால குளிர்விப்பான் உடனே வேலை செய்ய வேண்டும். ஆனால் பொதுவாக இவை வேலை செய்வதில்லை. அக்குளிர்விப்பான்கள் தகராறு செய்யும்போது எரிபொருள் குழாய்கள் முதலில் உருகுகின்றன. பின் எரிபொருளே உருகுகின்றது. மையப்பகுதிகள் முழுவதும் சூடான கதிரியக்க வாயுக்களால் சூழப்படுகிறது. உருகிய எரிபொருள் அழுத்தத்தால் எரிகிறது. நீராவி வெடித்துக் கிளம்பி கூரையை உடைத்து உள்ளிருப்பவைகளை வெளியே தூக்கி எறிகிறது. உருகிய யுரேனியம் கீழ்ப்பகுதியை பொசுக்கி பூமிக்குள் இறங்குகிறது. இதில் உள்ள மாபெரும் கதிரியக்க அபாயம் வாயு வடிவத்தில் இருக்கும் அணு பிளவுப் பொருட்கள்தான்...
கதிரியக்கத்தை கண்ணால் பார்க்க முடியாது. கேட்க முடியாது. நுகர முடியாது. அதை திரும்பிப்போ என்று கட்டளையிடவும் முடியாது. பரவி விட்டால் அதை உணர முடியாது. அவை மனித உடலில் நுழைந்து திசுக்களை அழித்து மரபுக் கூறுகளை ஏப்பம் விட்டபின்னர்தான் தெரிய வரும். அதற்குள் காலம் கடந்து விடும். அணு உலை உருகுவதன் மூலம் கதிரியக்கம் பயங்கரமாக பரவி பேரழிவை உருவாக்கும்.

இந்த கதிரியக்கம் மிகவும் ஆபத்தானது. அதன் வீரியம் 2,40,000 ஆண்டுகள் வரை கூட மங்காமல் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அது உயிர் உள்ள இனங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் எல்லாவற்றிலும் பரவுகிறது. பல நூறு ஆண்டுகள் கழித்து பிறக்க இருக்கும் குழந்தைகளைக் கூட இது பாதிக்கும்.

அணு உலை என்றாலே கதிரியக்கம்தான். கதிரியக்கம் அணு உலைகளில் அணுவைப் பிளக்கும் போதிலிருந்து தொடங்குகிறது. அதை குளிர வைக்கும் நீரில் கலந்து அந்நீர் வெளியேற்றப்படும்போது, தானும் வெளியேறி பரவுகிறது. எரிபொருள் கழிவான புளுட்டோனியம் மற்றும் யுரேனியம் மிகுந்த கதிரியக்கம் கொண்டவை. தேவையற்றவை என புதைக்கப்படும் கழிவுகளின் கதிரியக்கத்தின் தன்மை பல ஆயிரம் ஆண்டுகள் வரை அப்படியே நீடிக்கக் கூடியது. அணு சக்தி உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் இந்த அணு கதிரியக்கம் தவிர்க்க முடியாதது.

அணு உற்பத்தியின் முதல் நிலையான யுரேனியத்தை சுரங்கம் தோண்டி எடுக்கும்போது (இந்தியாவில் மேகாலயாவிலுள்ள மேற்கு காசி மலைகள்) ஏற்படும் உதிரிக்கழிவுகளிலுள்ள கதிரியக்கம் எத்தனை ஆண்டுகாலம் நீடிக்கும்? இக்கழிவுகளிலுள்ள கூறுகள் முறையே ரேடியம்-226, மற்றும் தோரியம்-236 (இது போன்ற எண்கள் அணுக்கூறுகளின் தனித்தன்மையை குறிப்பிடுபவை) தோரியம் உள்ள கழிவுள்ள கதிரியக்கம் அதன் பாதி வீரியம் மறைவதற்கு 76000 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் எந்த சுரங்க முதலாளி இதைப்பற்றி கவலைப்படபோகிறான்?

இரண்டாவது நிலையில், அணு உலையிலுள்ள கம்பிகள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஆகும் தேய்மானத்திற்காக இரசாயனங்களில் சுத்திகரிக்கப்படுகின்றன. கம்பிகளுள்ள கதிரியக்கக் கூறுகள் ஸ்ட்ரான்டியம்-0, சீசியம்-137மற்றும் புளுட்டோனியம் ஆகும். இதில் இரண்டு வகை உள்ள புளுட்டோனியக் கூறுகள் முறையே புளுட்டோனியம்-239 மற்றும் புளுட்டோனியம்-242 ஆகியவை உள்ளன. முதல்வகை புளுட்டோனியத்தின் பாதி வீரியம் மறைவதற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகளும் இரண்டாம் வகை புளுட்டோனியத்தின் வீரியம் மறைவதற்கு 3,80,000 ஆண்டுகள் ஆகும். இவ்வகை புளுட்டேனியத்தின் 10 ஆயிரத்தில் ஒரு பங்கை மனிதன் சுவாசித்தால் மரணத்தை விளைவிக்கக்கூடிய புற்றுநோய்கள் உருவாகும்.
இப்போதுள்ள அணுசக்தித் துறையின் திட்டப்படி இன்னும் 25 ஆண்டுகளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டாலும் நாம் தயாரிக்கப்போகும் அணு மின்சாரம் மொத்த மின் தேவையில் 9 விழுக்காட்டை எட்டாது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால் ஒரு அணு உலையை நிர்மாணிக்கும் செலவு அதிகரிக்கும். அணு உலை நிறுவிட 9 கோடி செலவாகும். மன்மோகன் சிங் உத்திரவாதமளிக்கும் 20 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரத்திற்கு செலவிடப்போகும் தொகை 20 லட்சம் கோடி. அதாவது ஒரு ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு இந்த ஒப்பந்தத்தின்படி 10 கோடி ரூபாய் ஆகும். நீர் ஆற்றலை பயன்படுத்தினாலும் காற்றாலையை பயன்படுத்தினாலும் நாம் ஏராளமான மின்சாரம் தயாரிக்க முடியும். இமாலயப் பகுதியிலிருந்து மட்டும் இவ்வாறு ஆண்டு தோறும் 1.5 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும். ஆந்திராவில் நீர் ஆற்றலைப் பயன்படுத்தி 50 முதல் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாராம் தயாரிப்பது அணு ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை விட செலவு குறைவானது; மிகவும் பாதுகாப்பானது. நாம் எந்த நாட்டிற்கும் அடிபணிய வேண்டியதில்லை...
கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள இடத்தில் அணுஉலைகள் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆழிப்பேரலை வந்தால் இந்த அணுஉலைகள் பாதிக்கப்படாது என்று அணுசக்தித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் ஆழிப் பேரலையோ அல்லது புயலோ இந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்படுத்த வாய்ப்புள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் பரிசீலிக்கவில்லை.
(2004 ஆழிப்பேரலையின்போது கூடங்குளம் அணுஉலை ஊழியர்கள் குடியிருப்புக்கு தண்ணீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையம் உண்மையிலேயே பாதிக்கப்பட்டது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது); ஆழிப்பேரலை நிகழும் நேரத்திலேயே கார்பனாடைட் டைக்ஸில் நிலஅதிர்வு ஏற்பட்டு உறுதி குலைந்தால், உருகிய பாறைப் பிதுங்கல்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது...
மக்களின் மகத்தான எழுச்சியிலிருந்து யாரும் விலகி நிற்க முடியாது. கூடங்குளம் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், ஊழல்கள் ஆகியவற்றுக்கு எதிராக அந்தந்தப் பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடுவார்களேயானால், அந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வலிமை எந்த அரசுக்கும் இருக்க முடியாது. ஜனநாயகத்தில் மக்களே இறுதித் தீர்ப்பை வழங்குபவர்கள் என்பதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்தப் போராட்டம் உணர்த்தியிருக்கிறது...
Share on :

0 comments:

Post a Comment

 
© Copyright Puthiya Seithigal 2011 - Some rights reserved | Powered by Blogger.com.
Template Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates and Theme4all