திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்


“பெருமழை நீரில் சாக்கடைகள் அடைத்து, வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டதென ஓங்காரமாய் புலம்பும் மனித சமூகத்திற்கு, ‘அடைத்துக்கொண்டிருப்பது தாங்கள் வீசியெறிந்த கேரி பேக்குகள்தான்’ என்பது ஏன் புரியவில்லை? “

கடந்த மாதத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தபோது வீடுகளில் தண்ணீர் புகுந்ததாக சபித்துக்கொண்டிருந்த சமூகத்தைப் பார்த்த என் குமுறல்தான் அது. ட்விட்டர், ஃபேஸ்புக், விகடன் வலைபாயுதே என மக்கள் ரசிக்கவும்(!) வாய்ப்பளித்த ஒரு குமுறல். வெறும் ரசிப்புக்கு மட்டுமே அந்தக் குமுறலை வார்த்தைகளாகத் துப்பவில்லையென்பதை நானறிவேன்.

ஏற்கனவே எழுதிப் பேசிய விசயங்கள்தான், என்னுடைய அறிவையோ, உங்களுடைய அறிவையோ மீறிய விசயம் அல்ல இது. ஆனாலும் அறிவு மழுங்கிப் போன இந்த மனிதச் சமூகம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து என்றுதான் விடுபடப் போகின்றது. அமிர்தமே கிடைத்தாலும் அதை பிளாஸ்டிக் பையில் போட்டு முடிச்சுப் போட்டுக் கொண்டு வருவதைப் பெருமையாக கருதும் சமூகம் இன்று தேநீர்க் கடைகள் தோறும் பார்சல் டீ என்பதை கொதிக்கும் சூட்டோடு வாங்கிக்கொண்டு சென்று ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருப்பதை எளிமை என்று நினைக்கின்றது.

அப்படி ஊதி ஊதி குடிக்கும் தேநீரில் புற்றுநோயின் விதையும் ஊர்ந்து வருவதை யோசிக்கும் அளவுக்கு யாருக்கு அமைதி இருக்கின்றது. முப்பது ரூபாய் கொடுத்து கைகளில் தொட்டிலாட்டியபடி வாங்கிச் செல்லும் மதிய உணவுப் பொட்டலங்களில் குட்டி குட்டியாய் முடிச்சிட்ட குழம்பும், ரசமும், மோரும், பொறியலும் குட்டிச்சாத்தான்கள் போல் உருண்டுகொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் அவிழ்த்துப் பரப்பி உண்டு கழித்தபின் அந்த குட்டிச் சாத்தான்களைக் கழுவி, காயவைத்து, இஸ்திரி போட்டு இரும்புப் பெட்டிக்குள்ளாகவா வைத்துவிடப்போகிறோம்.

அடியில் இருக்கும் பழைய செய்தித்தாள், வதங்கிய இலையோடு அப்படியே சுருட்டி சன்னல் வழியாகவோ, அல்லது அதிகபட்சமோ அருகாமையில் இருக்கும் குப்பைத்தொட்டி ஓரமாகவோ வீசிடப்போகிறோம். அதைக் குப்பைத் தொட்டிக்குள் கூட வீசும் அளவுக்கு பொறுமையில்லாமல் அந்த நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு நம்மை தொந்தரவு செய்துக் கொண்டிருக்கலாம்.

இன்றைக்கு எதை வாங்கினாலும், அதை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் பதுக்கி எடுத்து வருவதை சமூக அந்தஸ்தாக கருதும் மனோபாவம் கூடி வந்துவிட்டது. பொருள் வாங்கச் செல்லும் போது தவறாமல் கைகளில் அலைபேசியைப் பிடித்துச் செல்லும் நமக்கு உடன் ஒரு பையை எடுத்துச் செல்வது என்பது இழுக்காக இருக்கின்றது.

திருமணங்களில் இலைக்கு ஒரு தண்ணீர் பாட்டில் என வைப்பது, அந்த திருமணத்தின் அழகியல் என நினைக்கின்றனர். எல்லாம் தின்றுமுடித்து வெளியே வரும் வேளையில் குதப்பிக்கொண்டு வரும் பீடா கூட தனக்கு ஒரு உறை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றது, என்னவோ பீடாவின் கற்பு களவு போய்விடும் என்பது போல.

வரலாறு எதுவென்று தெரியாத சமூகம் தொலைக்காட்சிகளின் தொடர் அழுகாச்சியின் இடைவேளையில் வெளியே தலைகாட்டி வெளிச்சம் பாயும் தொலைக்காட்சிக் கேமரா முன்பு மூக்குச் சிந்துகிறது “வரலாறு காணாத வெள்ளம்’ என்று. என்ன வெங்காய வரலாறு அறிந்துவிட்டோம் நாம். இன்றைக்கு வீடு கட்டிக் குடியிருக்கும் இடத்தில் சிலபல ஆண்டுகளுக்கு முன் ஏரியோ குளமோ, வெள்ளவடிகாலோ இருந்திருக்கும் எனும் வரலாறு தெரியாத புறநகருக்கு ஓடி வந்த தலைமுறைதான் புலம்புகிறது வரலாறு காணாத வெள்ளமென்று.

ஊரின் நடுவே ஒய்யாரமாய் ஓடிக்கொண்டிருந்த நொய்யலை சாகடித்த திருப்பூர் தொழில் துறைக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் சமீபத்திய ஒரு ராத்திரி வெள்ளம். அடுத்த நாள் காலை திருப்பூரிலிருந்து பல கல் தொலைவு தாண்டி முத்தூர் அருகே நான் நொய்யல் நதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கலைந்த கர்ப்பம் போல் கருப்பான வெள்ளமொன்று கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதில் அடித்துச் சென்றது வெளிநாட்டுக் காசை ஈட்டும் வெறியில் கொட்டிய காலத்தால் மன்னிக்க முடியாத கசடுகள் மட்டுமல்ல, பல விலை மதிக்க முடியா உயிர்களும் கால்நடைகளும், சாமானியனின் வீட்டுப் பொருட்களும் தான்.

ஆங்காங்கே இந்திய வல்லுனர்கள் கட்டி வைத்திருந்த பாலங்களையும், தரைப் பாலங்களையும் ஓங்காரமாய் ஓடியவெள்ளம் அடித்து இழுத்துச் சென்றது. கிட்டத்தட்ட ஓரிரு நாட்கள் ஈரோடு மாவட்டத்தின் தெற்கு, முழுக்க முழுக்கத் துண்டிக்கப்பட்டு அனாதையாய்க் கிடந்தது.

எதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள முனையாத எம் சமூகம், வடிந்த வெள்ளத்தோடு தன் வாடிக்கையைத் துவங்கிவிட்டது. ஓடிவந்த நீர் தேங்கித் தேங்கி, அழுத்தம் கூடி உடைப்பெடுத்து, உத்வேகத்தோடு ஓடி அக்கம் பக்கம் இருப்பதை தன் கை நீட்டி கபளீகரம் பண்ணியதை எத்தனை பேர் கற்பனை செய்து பார்க்கத் தயாராக இருந்து விடப்போகின்றனர். கொட்டிய வெள்ளமெல்லாம் பள்ளம் கண்ட பக்கம் ஓடவிடாமல் தடுத்ததில் அவ்வப்போது வசதி என நினைத்து, எளிது என நினைத்து, அழகு என நினைத்துப் பயன்படுத்தித் தூக்கிப்போட்ட பிளாஸ்டிக் பைகள் தான் என்பதை எத்தனை பேர் உணரப்போகிறார்கள்.

உணர மறுக்கும் உணர்ச்சியற்ற சமூகத்திற்கு முகத்தில் அடிக்கும் சாட்சியாய் வடிந்துபோன நொய்யல் நதி தன் இரு பக்கமும் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது. ஒரு முறை பாருங்கள் அந்த அவலத்தை உயிர் நடுங்கும். ஆம் அடித்து வந்த வெள்ளத்தில் ஓரம் பாரம் ஒதுங்கிய பிளாஸ்டிக் குப்பைகளின் கொத்துக் கொத்தாக குவிந்து கிடக்கின்றன.

அவையெல்லாம் நாம் ஒருபோதும் தவிர்க்க முயலாமல், சற்றும் கூச்சமின்றிப் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பைகள்தான். வாங்கிப் பயன்படுத்திவிட்டு மறுசுழற்சிக்கு அனுப்பும் யோக்கிதை இல்லாத சமூகத்தை, என்றாவது ஒரு நாள் வெகுண்டெழும் இயற்கையின் கூறுகள் மறுசுழற்சி செய்யத்தான் போகின்றன. மறுசுழற்சிக்கு ஆட்படும் போது, முன்பு இருந்தது போலவே மீளும் தகுதி சற்றும் இந்த மனிதச் சமூகத்திற்கு இல்லை என்பது இன்னொரு பெரிய இயற்கைப் பேரிடரின் பின்னால் வேண்டுமானால் புரியலாம்.

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்பதை இயற்கை ஆழமாய், வடுவாய் எழுதிவிட்டுச் செல்லும்போது அதை வாசிக்கும் வலிமை யாருக்கு இருந்துவிடப்போகிறது?
Share on :

0 comments:

Post a Comment

 
© Copyright Puthiya Seithigal 2011 - Some rights reserved | Powered by Blogger.com.
Template Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates and Theme4all