மரமிருந்தால் மார்க்கம் உண்டு

                                 மரமிருந்தால் மார்க்கம் உண்டு


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் என்னும் சிறிய ஊரில் பிறந்தவர் ஹரிபிரசாத். அப்பா நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்ததால் பொறியியல் துறையில் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஹரிபிரசாத்துக்கு ஆர்வம் அதிகம். பிற்காலத்தில் பெரிய என்ஜினீயராக வரவேண்டும் என்ற எண்ணம் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஹரிபிரசாத்தின் மனதில் ஆழப்பதிந்து போயிற்று.


என்ஜினீயரிங் கனவுகளோடு பள்ளிக்கூடத்தில் காலடி எடுத்து வைத்த ஹரிபிரசாத்தின் இளம் பருவத்திலேயே விதி வேறுமாதிரியாக ஒரு கணக்குப் போட்டது. எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் விபத்தொன்றில் தந்தை அகால மரணமடைந்துவிட, குடும்பமே திகைத்துப் போனது. விபத்து மரணங்கள் இன்றைக்கு நிறைய குடும்பங்களை நிர்க்கதியாக்கி தெருவில் நிற்க வைத்து விடுகின்றன. ஹரிபிரசாத்தின் குடும்பமும் செய்வதறியாது திகைத்து நின்றது.


திகைத்து நின்ற இவர்களுக்கு ஓடோடி வந்து உதவியது தாய்மாமா கருணாகரன்தான். ஹரிபிரசாத்தையும் அவரது அம்மாவையும் தனது வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் கருணாகரன். சகோதரியின் மகனை தன் மகனைப் போலவே பாசத்துடன் வளர்த்து வந்தார். ஹரிபிரசாத்தின் என்ஜினீயரிங் கனவுக்கு இடையூறின்றி எண்ணெய் வார்த்து வந்தார் மாமா கருணாகரன்.


பள்ளிப்படிப்பு முடித்த கையோடு பெருந்துறையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பும் பின்பு சென்னையில் எம்.பி.ஏ. படிப்பும் தொடர்ந்து படித்துத் தேறினார் ஹரிபிரசாத்.


எம்.பி.ஏ. படித்தவுடன் எந்த வேலையில் சேரலாம் என எல்லோரும் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது ஹரிபிரசாத்தின் எண்ணங்கள் வேறு விதமாக ஓடின. மாமா வைத்திருக்கும் என்ஜினீயரிங் ஒர்க் ஷாப்பிலேயே புதிதாக ஏதாவது கருவிகளை கண்டுபிடிக்கும் எண்ணத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.


திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் நெசவு மற்றும் பின்னலாடைத் தொழில்கள் சிறந்து விளங்குவது எல்லோருக்கும் தெரியும். இந்தப் பகுதிகளில் அதிக அளவில் சாயப்பட்டறைகளும் உள்ளன. இங்கெல்லாம் அதிக அளவில் சாயம் காய்ச்ச பாய்லர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாய்லர்களில் எரிபொருளாக மரக்கட்டைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.


சீரான மரக்கட்டைகளையும், பெரிய பெரிய அடிமரக் கட்டைகளையும் கொண்டு வந்து கொட்டி வைத்திருப்பார்கள். சீரில்லாத மூன்றரை அடி அகல மரத்தூர்கள்கூட எரிபொருளாக இங்கு வந்துவிடும். இப்படிப்பட்ட சூழலில் இந்தப் பெரிய மரங்களை ஆட்களை வைத்துத்தான் ஆரம்பத்தில் உடைத்து வந்தார்கள். இதனால் ஆள் கூலியும் அதிகம். நேரமும் அதிக அளவில் செலவாகும்.


இந்தப் பெரிய பெரிய கட்டைகளை ஆள் வைத்து உடைப்பதை இயந்திரத்தின் மூலம் உடைத்து அளவான துண்டுகளாக மாற்றினால் என்ன...? என யோசிக்கத் தொடங்கினார் ஹரிபிரசாத். மாமாவின் பட்டறையில் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். முப்பது ஆண்டுகள் பொறியியல் அனுபவம் கொண்ட மாமா கருணாகரனும் தனக்கு உதவியதால் ஒரு வருட காலத்திலேயே ஓர் இயந்திரத்தை வடிவமைத்து முடித்தார் ஹரிபிரசாத். தெரிந்த நண்பர்கள் நடத்தும் தொழிலகங்களில் வைத்து இயந்திரத்தினை இயக்கவும் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இருந்த சிறிய சிறிய தவறுகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டு இறுதியாக மிகச் சிறப்பான செயல்வடிவத்துடன் கருவி மெருகூட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கருவிக்கு மரம் உடைப்பான் (Wood Breaker) என்கிற பெயரும் சூட்டப்பட்டது.


இந்த மரம் உடைப்பானை பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு மூன்று டன்கள் வரை மரங்களை சிறிய சிறிய துண்டுகளாக உடைக்க முடியும். பல ஆட்கள் பல மணி நேரம் செய்யக்கூடிய வேலையை இந்தக் கருவி சில மணி நேரங்களிலேயே செய்து முடித்துவிடுவதால் இந்த இயந்திரத்தினை பல நிறுவனங்கள் விரும்பி வாங்க ஆரம்பித்தன. இந்த இயந்திரத்தினை 45 ஹார்ஸ்பவர் மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட அனைத்து டிராக்டர்களிலும் இணைத்துப் பயன்படுத்தவும் முடியும்.
"தமிழகம் முழுவதும் உள்ள பாய்லர் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் உள்ள பாய்லர் பயன்படுத்துபவர்களும் தேடிவந்து இந்த இயந்திரத்தினை வாங்கிச் செல்கின்றனர்" என பெருமைபடக் கூறுகிறார் ஹரிபிரசாத் (செல்பேசி: 90033 00033 ). மேலும் மர மொத்த வியாபாரிகள், விறகுக்கடை வைத்திருப்பவர்கள், செங்கல் சேம்பர் தொழில் செய்பவர்கள், சிமெண்ட் தொழிற்சாலை நடத்துபவர்கள் கூட இந்த இயந்திரத்தை தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். காரணம், ஆள் கூலியும் நேரமும் மிச்சப்படுவதால் மட்டுமே. இப்படி நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த இயந்திரமாக இந்த மரம் உடைப்பான் விளங்குவதால் இதற்கு சந்தையில் வரவேற்பு கூடிக்கொண்டே வருகின்றது.


இன்னும் சில இடங்களில் இந்த இயந்திரத்தினை வாங்கிச் செல்பவர்கள் தங்கள் பயன்பாட்டிற்குப் போக மீதி நேரங்களில் வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் அதிக பட்சமாக மூன்று டன் மரக்கட்டைகளை உடைக்க கட்டணமாக 700 முதல் 800 வரை வசூலிக்கின்றனர். இதே பணியை ஆட்களைக் கொண்டு செய்யும்போது செலவு இருமடங்காக கூடி விடுவது மட்டுமின்றி, நேரமும் பலமடங்கு அதிகமாகி விடும்.


இப்படி இந்தக் காலத்திற்கு ஏற்றாற்போல் நேரத்தை மட்டுமின்றி, செலவையும் சிக்கனமாக்கும் இந்த இயந்திரத்தின் வரவு பயன்மிக்கது... பாராட்டத்தக்கது.
(உயர்வோம்)
Share on :

0 comments:

Post a Comment

 
© Copyright Puthiya Seithigal 2011 - Some rights reserved | Powered by Blogger.com.
Template Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates and Theme4all