தையல் மெஷின் மூடியில் தவில் இசை

                                      தையல் மெஷின் மூடியில் தவில் இசை


கிருஷ்ணா


வித்தியாச இசைக்கலைஞனின் வெற்றிக்கதை!


சேலம், பிள்ளையார் நகரைச் சேர்ந்த மைக்கேலுக்கு அப்போது வயது பத்து. அரசுப்பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். உணவு இடைவேளையில் சக மாணவர்கள் சினிமா பாடல்களைப் பாடும்போது, தாளம் பிசகாமல் வகுப்பறை மேசையில் தட்டுவார்.


இவரது இந்த ஆற்றலைக் கண்ட ஆசிரியர்களும், நண்பர்களும் ‘ஒரு டிரம்ஸ் வாங்கி இசைக்கலாமே?’ என்று மைக்கேலுக்கு ஆலோசனை சொன்னார்கள். மைக்கேலுக்கும் ஆசைதான். அப்பாவிடம் கேட்டார். ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்த அப்பா மோகனுக்கு, பிள்ளை கேட்டதை வாங்கித்தர விருப்பமிருந்தது. ஆனால், கிடைத்த சொற்ப வருமானமோ குடும்பத்தின் பசியைப் போக்கவே போதுமானதாக இல்லை. மைக்கேலின் அம்மா ஒரு தையற்கலைஞர். வீட்டிலேயே ஒரு பழைய தையல் மெஷின் வாங்கி, அக்கம் பக்கம் வீடுகளுக்கு துணி தைத்துக் கொடுப்பார்.


டிரம்ஸ் கிடைக்காத மைக்கேல், அம்மாவின் தையல் மெஷினை மூடும் மரமூடியை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். தவிலில் இருந்து வெளிவரும் இசையை தையல் மெஷின் மூடியில் இனம் கண்டார். குறிப்பிட்ட இசை என்பது அது அதற்குரிய வாத்தியங்களில் மட்டுமில்லை, அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் கூட இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார். வாத்திய இசையை எந்தெந்தப் பொருட்களில் உருவாக்க முடியும் என்கிற தேடலில் ஈடுபட்டார் மைக்கேல்.


சாப்பாடு சாப்பிட உபயோகப்படுத்தும் எவர்சில்வர் தட்டுகளில் மேற்கத்திய டிரம்ஸ் இசையையும், சேர்லாக் பால் டின்னிலும், மினரல் வாட்டர் கேனிலும் பம்பை வாத்திய இசையையும் உருவாக்க முடிந்ததைக் கண்டு கொண்டார். இப்படியே நூல் பிடித்து பழைய ஹெல்மெட் மூலம் கடம், அண்டா தூக்கு ஆகிய பொருட்கள் மூலம் தபேலா, வாட்டர் ஃபில்டர், பிளாஸ்டிக் பக்கெட் மூலம் டிரம்ஸ் என்று இசையை உருவாக்கும் நூற்றுக்கணக்கான பொருட்களை அடையாளம் கண்டார். கல்யாண மேளம், பம்பை, நையாண்டி, சண்ட மேளம் (கதகளி), கடம், மிருதங்கம், தபேலா உள்ளிட்ட கிட்டத்தட்ட 25 வகையான beatகளை இக்கருவிகளைக் கொண்டு இப்போது அச்சு அசலாக மைக்கேலால் உருவாக்க முடிகிறது.


அவரது பகுதியில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் இக்கருவிகளை வைத்து கச்சேரி செய்ய ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டது. கச்சேரி அமோகமாக அமைய, அடுத்தடுத்து சேலம் மாவட்டம் முழுக்க மைக்கேலுக்கு வாய்ப்பு மழை.


இதற்கிடையே, தங்கள் பள்ளி மாணவன் இவ்வகையில் புகழ்பெறுவது பள்ளிக்கும் பெருமை என்பதால் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் அவரை ஊக்குவித்தார்கள். மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த இசைப்போட்டிகளுக்கு மைக்கேலை அனுப்பி வைத்தார்கள். அம்மாதிரியான ஒரு போட்டியில் மாவட்டத்திலேயே முதலிடம் மைக்கேலுக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியைநேரில் பார்த்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதிவாணனுக்கு மைக்கேலின் இசை பிடித்துப் போனது. மாவட்ட நிர்வாகம் தொடர்பான அரசு விழாக்களுக்கு இசையமைக்க மைக்கேலை சிபாரிசு செய்தார். ஏற்காடு கோடைவிழாவில் இசையமைக்கும் அரிய வாய்ப்பும் மைக்கேலுக்கு இப்படித்தான் கிடைத்தது.


இப்போது மைக்கேல் உள்ளூர் கேபிள் சேனல்களில் பிரபலம். பேட்டி, நிகழ்ச்சி என்று சக்கைப்போடு போடத் தொடங்கினார். சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து, ‘சிறந்த சாதனையாளர் விருது’ம் பெற்றார்.


அடுத்து? சினிமா ஆசை இவர் மனதைப் பற்றிக்கொண்டது.


அதற்கு முன்பாக இசையை "முறைப்படி கற்க ஆசைப்பட்டார் மைக்கேல். முறையாக இசையைக் கற்பது என் எதிர்காலத்துக்கு உதவும் என்பதால், +2 முடித்தவுடனேயே 2008ல் சென்னைக்கு வந்தேன்" என்று, தான் சென்னைக்கு வந்த கதையை சொல்கிறார் மைக்கேல்.


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைப்பள்ளியில் சேருவது மைக்கேலின் அன்றைய லட்சியமாக இருந்தது. ஆனால், அவர் நினைத்த மாதிரியில்லாமல் இங்கே இசை படிக்க நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. மைக்கேலிடம் அவ்வளவு பணமில்லை. மனம் வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கணிப்பொறி அறிவியல் இளங்கலைப் படிப்பில் சேர லயோலாக் கல்லூரியில் அவருக்கு அனுமதி கிடைத்திருந்தது.


கல்லூரி நிர்வாகம் அவரது படிப்புக்கு பொருளாதார ரீதியாக உதவியதோடு, இசை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் கலந்துகொள்ள ஊக்கமும் தந்தது. கல்லூரிகளுக்கு இடையிலான இசைப்போட்டிகளில் தனது வித்தியாசமான இசைக்கருவிகளோடு களமிறங்கி, இருபது வயது முடிவடைவதற்குள், தான் விரும்பிய துறையில் சொல்லிக் கொள்ளத்தக்க பெயர் பெற்றுவிட்டார் மைக்கேல். இவ்வருடம் கல்லூரிப் படிப்பும் முடிந்துவிட்டது. மாநிலம் முழுக்க கிட்டத்தட்ட நூறு தனி மேடை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியிருக்கிறார்.


"என்னுடைய லட்சியம் ஆஸ்கர்தான் சார். இப்போது எனக்கு முறையான வாத்தியக் கருவிகளை வாசிப்பதிலும் நல்ல பயிற்சியுண்டு. இருந்தாலும் புதுப்புதுக் கருவிகளில் புதுப்புது இசையை தேடிக்கொண்டே இருக்கிறேன். இப்போது கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது கருவிகளைக் கொண்டு இசையமைக்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அதைச் சரியாக அடையாளம் கண்டு போராடுவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது" என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் இந்த இளைஞர்.
Share on :

0 comments:

Post a Comment

 
© Copyright Puthiya Seithigal 2011 - Some rights reserved | Powered by Blogger.com.
Template Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates and Theme4all